Thursday, June 30, 2022

"நீதிபதியின் நாற்காலி"

"நீதிபதியின் நாற்காலி" 

“...நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன?… நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.” – ரோமர் 14:10 

இலட்சம்பேர்களை கொன்று குவித்த சர்வாதிகாரி ஹிட்லரைக் குறித்து ஒருவர் கூறும் போது, “ஹிட்லரை நரகத்தில் போடும் முன் இன்னும் நரகத்தை பல மடங்கு சூடாக்க வேண்டும்” என்றாராம். அதாவது அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை நரகத்தை விட கொடியதாயிருக்க வேண்டுமென்பதே! ஆனால் வேதம் கூறுவது என்ன? நீ யாரையும் நியாயம் தீர்க்க வேண்டாம். ஏனென்றால் “எல்லோரும்” கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டும். அதாவது நீ படுபாவியாக நினைப்பவன் மாத்திரமல்ல, நீயும் கணக்கொப்புவிக்க தேவனுக்கு முன்பாக நிற்க வேண்டும் என்பதே! ஆகவே யாரையும் நியாயம் தீர்க்கவோ, குற்றவாளியாக தீர்க்கவோ முந்திக்கொள்ளவேண்டாம். இது நம் வேலையுமல்ல.

இயேசு ஒரு நாள் எருசலேமிலே இருந்தபோது பரிசேயர்கள் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாக பிடித்த ஒரு பெண்ணை கொண்டு வந்து அவர் முன் நிறுத்தினார்கள். அவர்கள் அனைவரும் அவளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என ஆயத்தமாய் நின்றபோது “உங்களில் பாவமில்லாதவன் முதலில் கல்லெறியட்டும்” என்றார் இயேசுகிறிஸ்து. அதைக் கேட்டவுடன் ஒருவர் கூட அந்த இடத்தில் இல்லை. ஆம், வெளிப்படையாக பாவம் செய்தவளை ஜனங்கள் கண்டனர் ஆனால் எல்லாருடைய அந்தரங்கங்களையும் அறிந்த ஆண்டவரோ, “அவளை குற்றவாளியாக தீர்க்கும் நீயும் பாவிதானே” என்பதை அழகாய் சுட்டிக் காட்டினார்.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் நண்பரே! நமக்கு எப்போதுமே பிறருடைய குற்றங்கள்தான் கண்முன் நிற்கும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற வேகம் நம்மிடத்தில் உண்டு. ஆனால் இன்றைய தியானம் கூறும் செய்தி என்ன? நாம் ஒவ்வொருவருமே நம்மைக் குறித்து தேவனிடம் கணக்கொப்புவிக்க வேண்டும். காரியம் இப்படி இருப்பதினால் நாம் யாரையும் குற்றவாளிகளென்று தீர்க்க வேண்டாம். நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். நீதியுள்ள நியாயாதிபதி இயேசு கிறிஸ்துவே! நாம் ஒரு போதும் அவருடைய சிம்மாசனத்தில் அமர முயற்சிக்க வேண்டாம். பவுல் ரோமாபுரியிலுள்ள சபையாருக்கு கூறும் இந்த ஆலோசனைகளுக்கு நாமும் கீழ்ப்படிவோம். தேவ சமுகத்தில் இரக்கம் பெறுவோம்.