Thursday, June 30, 2022

அசாதாரண அற்புதம்

🍒 "அசாதாரண அற்புதம்" 🍒

“அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;…” - பிரசங்கி 3:11

வயது முதிர்ந்த ஊழியர் ஒருவர் பகிர்ந்து கொண்ட சாட்சி இது. அவரது ஒரே மகன் தனது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்திருந்தார். சிறுவயதிலிருந்தே நன்றாகப் படிப்பவர். எனவே டாக்டர் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். MBBS சீட் கிடைக்காததால் மகன் மிகவும் சோர்வோடு, “என் பெற்றோர் மிஷனெரிகளாக எவ்வளவு கஷ்டப்பட்டு ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டவர் ஏன் இந்த மெடிக்கல் சீட் எனக்கு கிடைக்கும்படி செய்யவில்லை” என்று மிகவும் வருத்தமடைந்தான். தகப்பனாரோ ஆண்டவர் எதைச் செய்தாலும் நன்மைக்காகவே செய்வார் என்று கூறினார். ஆனால் மருந்துகள் ஆய்வு செய்யும் துறையில் அவனுக்கு சீட் கிடைத்தது. தன் படிப்பை முடித்து வேலையில் இணைந்தார். படிப்படியாய் தேர்வுகள் எழுதி தற்போது வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் மருந்துகளுக்கு கையெழுத்திட்டு அனுமதி வழங்கும் துறையில் பெரிய அதிகாரியாக டெல்லியில் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமையிலும் ஒரு வீட்டு ஆராதனைக் குழுவை நடத்தி ஊழியம் செய்து வருகிறார். தன் தந்தையிடம்,  “MBBS சீட் கிடைக்காமல் தேவன் நன்மையே செய்திருக்கிறார். கிடைத்திருந்தால் ஒரு சாதாரண டாக்டராக மட்டுமே இருந்திருப்பேன். ஆனால் இப்பொழுதோ M.D, M.S படித்த மூத்த டாக்டர்கள் என்னிடத்தில் வேலை செய்கிறார்கள். இன்டர்வியூவிற்கு வருகிறார்கள். தேவன் எப்பொழுதும் யாருடைய வாழ்விலும் தவறு செய்வதில்லை. தரமானதை மாத்திரம் செய்வார்” என்றார்.

மத்தேயு நான்காம் அதிகாரத்திலும் நீர் தேவனுடைய குமாரனேயானால் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும், தாழக்குதியும் என்று இயேசுவை பிசாசு சோதிக்கிறான். நாமும் ஆண்டவருக்கு பிரியமாய் தானே வாழ்கிறோம், ஊழியத்தைத்தானே செய்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் காரியங்கள் ஏன் எதிர்பார்த்தபடி நடப்பதில்லை என்று நம்மை பிசாசு சோர்வடையச் செய்து, குறுக்கு வழிகளை ஞாபகப்படுத்துவான். அப்போது இயேசு, மனுஷன் அப்பத்தினாலே (நாம் எதிர்பார்க்கும் காரியங்கள்) மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் (நாம் எதிர்பார்க்காத அவருடைய காரியங்கள் மூலமாகவும்) அற்புதம் செய்ய முடியும்.

அன்பு தேவப்பிள்ளைகளே! நாம் எதிர்பார்க்கிறபடி காரியங்கள் நடக்காதபோது, எனது விருப்பமல்ல ஆண்டவரின் விருப்பமே என் வாழ்வில் நிறைவேறி வருகிறது என்பதை முழுமனதோடு விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுங்கள். நம் வாழ்வின் எஜமானர் அவரே! நாம் நம்முடையவர்களல்ல அவருடைய சொத்து! அவர் யாருடைய வாழ்விலும் தவறு செய்வதில்லை, தாமதிப்பதில்லை ஆனால் தரமானதை தருவது முழு நிச்சயம்! எதிர்பார்ப்போடு பொறுமையாய் ஓடுவோம்! அல்லேலூயா.