Saturday, June 4, 2022

*"உன்னதமான சிலாக்கியங்கள்"*

*"உன்னதமான சிலாக்கியங்கள்"*

*_“அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்"_* (சங்கீதம் 113:7).

*உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களால் மிகவும் அற்பமாக எண்ணக்கூடிய நிலையில் கடந்து போய்க்கொண்டிருப்பீர்களானால், சோர்ந்து போகாதீர்கள். கர்த்தர் உங்களைத் தூக்கிவிடுகிறவராக, குப்பையில் இருந்து உங்களை  உயர்த்துகிறவராக இருக்கிறார். ‘இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டுஎடுத்து, நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்’ (2 சாமு 7:8-9) என்று வேதம் சொல்லுகிறது.*

*கர்த்தர் தாவீதைப் புழுதியிலிருந்து தூக்கியெடுத்தார். உங்களையும் கூட அவ்விதமாகவே உயர்த்துவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த உலகத்தில் அற்பமான காரியத்தைச் சார்ந்து வாழுகிற உயர்வை எண்ணிப்பார்த்து நீங்கள் வாழக்கூடாது. கிறிஸ்துவின் மூலமாகக் கர்த்தர் ஆவிக்குரிய மிக உன்னதமான உயர்வை நமக்குக் கொடுத்திருக்கிறார். இன்னுமாக அவரோடுகூட நாம் இருக்கும்படியாகவும் தேவன் செய்திருக்கிறார். ஆவிக்குரிய மேலான கிருபைகளை நமக்குத் தந்தருளின கர்த்தர், பாவங்களினால் உழன்று கொண்டிருந்த நம்மை, தேவனுடைய பிள்ளைகளாக உயர்த்தியிருப்பது எவ்வளவு மேலான சிலாக்கியம் என்பதை அதிகமாக நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.*
 
*இந்த உலகத்தின் உயர்வை விட ஆவிக்குரிய உயர்வு மிக உன்னதமானது, மகிமைகரமானது. தேவ ஆவியானவர், இவ்விதமான சுதந்திரத்திற்கு நாம் பங்காளிகளாக வாழுகிறோம் என்ற நிச்சயத்தை நமக்கு கொடுப்பாரானால் அது எவ்வளவு நலமாக இருக்கும்! புழுதியிலிருந்து நம்மைத் தூக்கி எடுக்கிறவர், குப்பையிலிருந்து உயர்த்துகிற தேவன் அவர். அவரை நாம் பற்றிக் கொண்டு, அவருக்காக நம்முடைய வாழ்க்கையை  அர்ப்பணிக்கும் பொழுது, நிச்சயமாக தாழ்வு என்பது இல்லை. உன்னதமான சிலாக்கியங்களுக்கு பங்காளிகளாவோம்.*

*நம் நிலை என்ன? உலகத்தின் காரியங்களா? ஆவிக்குரிய சிலாக்கியங்களா?*

"காலை வணக்கம்"
"இந்த நாள் தங்களுக்கு ஆசீர்வாதமான நாளாக அமைவதாக"