Saturday, July 16, 2022

கேள்வி கேட்காத கீழ்ப்படிதல்

"கேள்வி கேட்காத கீழ்ப்படிதல்"

“... நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.” - உபாகமம் 26:14

மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர் “வேலைக்கு ஆட்கள் தேவை” என்று விளம்பரம் செய்திருந்தார். இளைஞர்கள் பலரும் விளம்பரத்தைக் கண்டு உற்சாகமாய் வந்தனர். இரண்டு நாள் அவர் சொன்ன வேலையைச் செய்ததும், மீண்டும் வருவதையே நிறுத்திக் கொண்டனர். வந்த ஒருவராகிலும் வேலையில் நிலைக்கவில்லை. இறுதியில் ஒரு வாலிபன் வேலைக்கு வந்தான். அவனிடம் அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லி கற்களை எடுத்து சற்று தொலைவில் போய்க் கொட்டச் சொன்னார். இப்படி ஒரு வாரம் முழுவதும் பலவிதமான வேலைகளைச் சொன்னார். எதிர்பேச்சு பேசாமல் சொன்ன வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து வேலையையும் செய்து அந்த வாரத்தின் கூலியும் பெற்றான். ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை வேலைக்கு வந்தவனைக் கண்டு அதிர்ச்சியடைந்த எஜமானன், ஏன் எதற்கு என்று எந்தக் கேள்வியுமின்றி எஜமானின் கட்டளைக்கு அப்படியே உண்மையாய் கீழ்ப்படிந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையைக் கொடுத்து, இரகசியம் காக்கவும் அவனை நியமித்தார். அவன் உயிருள்ளவரை அவருடைய குடும்பத்தாருக்கு மெய்க்காப்பாளனாக இருந்தான்.   

“என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்” என்று கர்த்தரே மோசேயைக் குறித்து சாட்சி சொல்லியிருந்தால் அவனின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக காணப்பட்டிருக்கும். ஆசரிப்புக் கூடாரத்தை கட்டும்படியாக தேவன் தன்னுடைய திட்டங்களை, அதற்குரிய வழிமுறைகளையும் சொல்லும்போது, கவனமாய் ஏற்றுக்கொண்டு, அதில் தன்னுடைய சுய ஞானம் ஒன்றையும் வெளிப்படுத்தாமல், தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை தட்டிக்கழிக்காமல் தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிந்தவனாக உண்மையாய் செய்து முடித்தான்.
 பிரியமானவர்களே, நமது தனிப்பட்ட அந்தரங்க வாழ்வில் நாம் தேவனுக்கு கீழ்ப்படிகிறோமா? வேதத்தில் அவர் கட்டளையிட்ட காரியம் ஒவ்வொன்றையும் நிறைவேற்ற பிரயாசப்படுகிறோமா? கேள்வி கேட்காமல், அவருடைய சித்தத்தைச் செய்ய விரும்புபவர்களையே தேவன் தேடுகிறார். அப்படி கீழ்ப்படியும்போது அநேகருக்கு பிரயோஜனமுள்ள ஜீவ ஊற்றாக நம் ஒவ்வொருவரையும் அவர் நிச்சயமாகவே மாற்ற வல்லவராக இருக்கிறார். ஒருவேளை ஆலயத்தில் ஒரு சிறு வேலையைச் செய்யும்படி தேவன் உங்களை அழைத்திருக்கலாம், அதில் நீங்கள் கேள்வி எதுவும் கேட்காமல், எனக்கு இருக்கும் படிப்புக்கும், தாலந்துக்கும் ஏற்ற வேலையா? என்று கேள்வி கேட்காமல், உத்தமமாக அதைச் செய்யும் போது, உங்கள் உண்மையை காண்கின்ற தேவன் உங்களை அநேகத்திற்கு பொறுப்புள்ளவராக மாற்றுவார். சிறு காரியத்திலேயே முறுமுறுத்துக் கொண்டிருந்தால், யார் உங்களை நம்பி ஒரு வேலையைக் கொடுக்க முடியும்? கீழ்ப்படியில் கால் வைத்தால்தான் மேல்படிக்குச் செல்ல முடியும். நாம் அவர் சத்தத்திற்கு செவிகொடுத்து கேள்வி கேட்காமல், அவருடைய சித்தத்தை நிறைவேற்றினால், நிச்சயமாகவே நம்மையும் உயர்த்துவார்.