Saturday, July 9, 2022

"திட்டம் நிறைவேறும்"

"திட்டம் நிறைவேறும்"

“நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ,… வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.” - ஆதியாகமம் 50:20

தேவன் நமக்கென வைத்திருக்கும் திட்டத்தை ஒரு மனிதராலும் குலைத்திட முடியாது! அதற்கு மாறாக யார் என்ன தீமை செய்தாலும் அவை யாவற்றையும் நம்முடைய நன்மைக்காகவே தேவன் நடத்தி முடிப்பார் என்பதை விசுவாசிக்கிறீர்களா? இதற்கு யோசேப்பின் வாழ்வு ஒரு சவால்!

“யோசேப்பு” என்ற தேவனுக்குப் பயந்த வாலிபனை எகிப்தின் இரண்டாம் அதிபதியாக நியமிப்பதே தேவனுடைய திட்டம். ஆனால் அவன் மீது அவனுடைய 10 மூத்த சகோதரர்களும் பொறாமை கொண்டு, பகைத்து அவனை அடிமையாக விற்றுப்போட்டார்கள். யோசேப்பு எங்கு கொண்டு செல்லப்பட்டான் தெரியுமா? எகிப்திற்கேதான்! இப்போது தேவத்திட்டம் நிறைவேறப்போவதின் துரிதத்தை நாம் காணமுடிகிறதல்லவா? இதுபோலத்தான் உங்கள் மீது யாராவது பொறாமை கொண்டு தூக்கி எறிந்தால்... நீங்கள் எங்கே வரவேண்டுமென்று தேவன் விரும்பினாரோ அந்த இடத்திற்கே வந்து சேர்வீர்கள் என்பதை நன்றாய் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆகவே அவர்கள் யோசேப்பை தூக்கி எறிந்த சம்பவம் தேவனுடைய திட்டம் நிறைவேறுவதற்கே வழிவகுக்கிறது. யோசேப்பைப் போலவே நாமும் தூக்கி எறிந்த சகோதரர்களை ஒருபோதும் குறை சொல்லக்கூடாது. வேண்டுமானால் தேவதிட்டம் நிறைவேறுவதற்கு அவர்கள் உதவுகின்றபடியால் அவர்களிடம் மிக்க நன்றி என்றே கூறலாம்.

யோசேப்பை தன் இச்சை வலைக்குள் இழுப்பதில் தோல்வியடைந்த போத்திபாரின் மனைவியோ மிகுந்த கோபம் கொண்டாள். அவள் தன் கணவனிடம் யோசேப்பைக் குறித்து வீண்பழி சுமத்தி சிறையில் அடைக்கச் செய்தாள். இவையெல்லாவற்றையும் கவனமாய் கவனித்துக் கொண்டிருந்த தேவன், யோசேப்பு சிறைக்குள் செல்லும் அதே நேரத்தில், பார்வோனின் பானபாத்திரக்காரனையும் சிறைக்குள் வரும்படி செய்தார்! ஆம், இது ஆச்சரியம்! இருவரும் அறிமுகமானார்கள். இதுவே யோசேப்பு பார்வோனின் அரண்மனைக்கு செல்வதற்கு ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்தது. இதற்கு மாறாக, யோசேப்பு போத்திபாரின் மாளிகையில் பாவத்தை அனுபவித்திருந்தால் பானபாத்திரக்காரனை சந்திப்பது கூடாமல் போயிருக்கும். ஆம், நாமும் இதுபோலவே பிறரால் பொய்யாய் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்றாலும் அங்கேயும் தேவன் நமக்காக ஒரு திட்டத்தை வைத்திருப்பார் என்பதை மறவாதீர்கள். ஆம்! தேவனிடத்தில் அன்புகூருபவர்களின் வாழ்வில் நடக்கும் அனைத்தும் நன்மையே!