Tuesday, July 5, 2022

"சோதோமின் ராஜாவும் சாலேமின் ராஜாவும்"

"சோதோமின் ராஜாவும் சாலேமின் ராஜாவும்"

"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." (மத்தேயு 6.33). 

எபிரெயர்கள் என்ற சொல் ஆரம்ப காலத்தில் நாடோடிகளாய் இடம் விட்டு இடம், நாடு விட்டு நாடு சென்று வாழ்ந்த மக்களை குறித்தது. ஆபிரகாம் நாடோடி என்று சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. ஆபிரகாம் ஒரு இனத்துக்கு தலைவன். லோத்து சிறைப் பட்டு போனதைக் கேள்விப் பட்டவுடன் ஆபிரகாம் சிறிதும் தாமதிக்காமல் தன்னிடம் பயிற்சி பெற்ற 318 பராக்கிரம சாலிகளை தெரிந்து கொண்டு உடனடியாக மீட்கச் சென்றான். 318 பராக்கிரம சாலிகள் இருக்க வேண்டுமென்றால் அவனிடம் குறைந்தது 1000 பேர் இருந்திருப்பார்கள். ஆபிரகாம் யுத்தம் செய்யவும் எதிரிகளை முறியடிக்கவும் வல்லமை உடையவராகவும் தைரியம் நிறைந்தவராகவும் இருந்தார். தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தார். நாமும் அப்படித்தான் பிரச்சினை, இக்கட்டுகள் வரும்போது தளர்ந்து விடாமல் அதை எதிர் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறவர்களாயும், எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும்.

"நம்முடைய தேவன் எப்போதும் நம்முடனே இருக்கிறார். ஆபிரகாமை இரண்டு ராஜாக்கள் ஒரேநேரத்தில் சந்திக்க வருகிறார்கள். சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான். அதே நேரம்“உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு ஆபிராகமை சந்தித்து அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று ஆசீர்வதித்தார்” (ஆதி 14.17-20). சோதோமின் ராஜா உலகத்திற்கு அடையாளமாகவும், சாலேமின் ராஜா தேவனாகிய கர்த்தருக்கு அடையாளமாகவும் நாம் தியானிக்கலாம்."

"உலகத்தின் ராஜாவின் உத்தேசம் உன்னுடைய ஆட்களும் நீயும் அவனுக்கு வேண்டும். பதிலாக உனக்கு இன்னும் அநேக நன்மைகளையும் பொருட்களையும் தருவான். அவனை சார்ந்து இருந்தால் அவனுடைய ஆள் என்கிற பெயர் இருக்கும். அதிகமான மரியாதை மக்களிடம் இருக்கும். ஆனால் சாலேமின் ராஜாவிடம் உன்னதத்தின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஆபிரகாம் உலகத்து ராஜாவை சந்திக்காமல் சாலேமின் ராஜாவை சந்தித்தார். உலகத்தின் ராஜா ஒரு வேளை என்னை முதலில் பார்க்காமல் மற்றவனை பார்த்து விட்டானே என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் உன்னதமானவரின் ஆசீர்வாதம் என்ன என்பதை ஆபிரகாம் அறிந்து வைத்திருந்தார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6.33). 

"உலகத்தின் ஆசீர்வாதங்கள் உன்னை சூழ நிற்கும் போது நீங்கள் அவைகளை நீங்கள் பெருட்படுத்தாமல் தேவனிடம் சார்ந்து இருக்க வேண்டும். தேவனுடைய சரீரமாகிய சபையில் நீங்கள் அங்கத்தினராக இருக்க வேண்டும்.தேவனுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இந்த உலகத்தில் நீங்கள் நேடுகிறது எதுவானாலும் இந்த உலகத்தோடு அழிந்து விடும்.உங்கள் படிப்பு,அந்தஸ்து,வேலை, சம்பாத்தியம், மனைவி, பிள்ளைகள், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மட்டுமல்ல உங்கள் அத்தனையும் உங்கள் மரணத்தோடு முடிந்து விடும், மறக்கப் பட்டு விடும். தனியாக உலகத்தில் வந்த நீங்கள் தனியாகத்தான் போக வேண்டும். ஒன்றும் உங்களோடு வராது. நீங்கள் அழியாத ராஜ்யத்தை சுதந்தரித்து கொள்ளவேண்டுமென்றால் நீங்கள் தெரிந்தெடுக்க வேண்டியது சாலேமின் ராஜாவைத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆமென். அல்லேலுயா."