Sunday, July 24, 2022

கொப்பேர் மரம் சொல்லும் சத்தியம்

"கொப்பேர் மரம் சொல்லும் சத்தியம்" 

“நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்புசு” – ஆதியாகமம் 6:14 

மாலா, கவிதா என்று இரண்டு தோழிகள் ஒரே கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்கள். கவிதா இயேசு கிறிஸ்துவின் அன்பை அறியாத குடும்பத்தில் பிறந்த ஒரு பெண். மாலா தன் சிறு வயதில் இருந்தே ஜெபம், வேதவாசிப்பு என்று இயேசுவிற்காக உற்சாகமாக செயல்படக்கூடியவள். இவள் தன்னை சுற்றியுள்ள எல்லோரிடமும் அன்பாக பழகுவாள், தன் கல்லூரி படிப்பு, விளையாட்டு என்று எல்லா துறைகளிலும் முதலிடம் பிடிப்பவள். இதற்கு நேர் எதிராக இருந்தவள் தான் அவளுடைய தோழி கவிதா. தன்னுடைய கல்லூரி காலத்தில் உலகத்தோடும், உலக சிற்றின்பங்களோடும் நேரம் செலவு செய்வதை தன்னுடைய விருப்பமாக கொண்டிருந்தாள். படிப்பிலும் இவள் சற்று மந்தமாகவே இருந்தாள்.

ஒருமுறை கவிதா மாலாவிடம் ஒரு கேள்வி கேட்டாள். “மாலா, நாம் இருவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள், ஆனால் நமக்குள் நிறைய வித்தியாசங்கள் உள்ளது, உன்னால் மட்டும் எப்படி எல்லாவற்றிலும் முதலிடம் பிடிக்க முடிகிறது?” என்று சற்று வருத்தத்தோடு கேட்டாள். கவிதாவிடம் நெருங்கி சென்று மாலா சொன்னாள் “நான் என்னை படைத்த தேவனுக்கு என்னுடைய அன்றாட வாழ்வின் முதல் மணிநேரத்தை செலவு செய்வேன். மனிதர்களிடம் பேசுவதற்கு முன்பாக முதல் மணிநேரத்தை அவருடைய பாதத்தில் செலவழிப்பேன், அப்பொழுது அவர் என்னிடம் பேசுவார். அவர் சத்தத்தைக் கேட்டு என் நாளை நான் துவங்க, அனைத்தும் ஜெயமாக முடியும் உலக இச்சை, சிற்றின்பங்களில் சிக்காமல் அது நம்மைப் பாதுகாக்கும்” எனக் கூறினாள். உடனே கவிதாவும் தொடப்பட்டவளாக தன் வாழ்வை ஆண்டவருக்கு அர்ப்பணித்தாள்.

வேதத்தில்கூட ஆண்டவர் கொப்பேர் மரத்தைக் கொண்டு அந்த நாட்களில் நோவாவை பேழை செய்ய சொல்கிறார். ஏன் கொப்பேர் மரத்தை தேவன் தெரிந்து கொண்டார் தெரியுமா? கொப்பேர் மரமானது எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் அதோடு ஒட்டாது, அதில் பிசின் போன்று உள்ள வழவழப்புத்தன்மை தண்ணீரையும், தூசியையும் அந்த மரத்தின் மேல் ஒட்டவிடாமல் காத்துக்கொள்ளும். தேவனை அறிந்துகொண்ட நாமும் உலகத்தோடு வாழ்ந்தாலும், உலகத்தில் உள்ள பாவங்களோடும் சிற்றின்பங்களோடும் ஒட்டாமல் நம்மை காத்துக்கொள்ள வேண்டும். அன்று கொப்பேர் மரத்தில் செய்யப்பட்ட பேழையில் உள்ள நோவாவின் குடும்பத்தார் போல நாமும் காப்பாற்றப்பட உலகத்தோடு கலவாமல் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நாமும் ஆண்டவர் துணையுடன் ஆயத்தமாவோமா?