Saturday, July 2, 2022

அதிகாலையில் ஆண்டவரோடு

"அதிகாலையில் ஆண்டவரோடு"  

“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்;…” - ஏசாயா 40:31

“நான் காலைதோறும் இரண்டு மணி நேரமாவது தேவசமூகத்தில் தரித்திராவிட்டால், அன்றைக்கு சாத்தானுடைய கை ஓங்கும். ஜெபம் கூடும்போது ஜெயமும் கூடும். தேவ பிரசன்னமே எம் மகிழ்ச்சி! தேவனுடைய வார்த்தையே எனது ஆகாரம்!” என்று கூறியுள்ளார் புராட்டஸ்டண்டு சபைகளின் முன்னோடி மார்டின் லூத்தர்.
 ஆயிரக்கணக்கான சிறு பிள்ளைகளைத் தன்னுடைய விசுவாசமுள்ள ஜெபத்தினால் வாழ்நாள் முழுவதும் போஷித்து வந்த ஜார்ஜ் முல்லர், “65 வருடங்களாக என் படுக்கையினருகில் ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீரை வைத்துக்கொண்டு அதிகாலையில் குறித்த நேரத்தில் எழுந்து முகத்தைக் கழுவி தேவனோடு ஜெபிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்” என்றார். வல்லமையாய் ஊழியம் செய்த ஆஸ்வால்டு ஸ்மித் கூறும்போது “என்னுடைய கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே நான் அதிகாலையில் தேவ சமூகத்தில் காத்திருக்கும் பழக்கத்தை ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் தேவனோடு நேரம் செலவழிப்பதை 40 ஆண்டுகளாக கைக்கொண்டு வருகிறேன்” என்றார். இப்படி தேவ மனிதர்கள் தங்கள் ஜெப வாழ்வை குறித்து சாட்சி பகர்கிறார்கள். 

வேதத்தில் ஏசாயா தீர்க்கதரிசி இந்தக் காரியத்தை அழகாக விளக்குகிறார். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள் என்று! இந்த வசனத்தை தெரியாத கிறிஸ்தவர்களே இருக்க முடியாது. ஆம், கிறிஸ்தவர்களாகிய நாம் சந்திக்கும் ஆபத்துகளில் ஒன்று, அடிக்கடி சில வசனங்களைக் கேட்டுக் கொண்டேயிருப்பதால் அதன் கருத்தையும் முக்கியத்துவத்தையும் அறியாமல் விட்டு விடுவது! ஆனால் கர்த்தருக்குக் காத்திருக்கும்படி வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. வசனம் தெரிந்த நம்மில் எத்தனை பேர் கர்த்தருக்குக் காத்திருக்கிறோம். அதிகாலை ஜெபத்தின் அருமைகளை அறிந்தவர்களாகிய நம்மில் எத்தனை பேர் வசனத்திற்கு கீழ்ப்படிந்து ஜெபிக்கிறோம்? வசனம் தெரிந்த பக்தகோடிகளையல்ல, வசனத்திற்கு கீழ்ப்படியும் பரிசுத்தர் கூட்டங்களையே தேவன் ஆசீர்வதிக்க விரும்புகிறார். நம்மைக் குறித்து என்ன?

இப்பொழுதெல்லாம் சீக்கிரமாய் எழுந்து பள்ளிக்கு சமைக்க வேண்டியதில்லை என்பதால், காலையில் எழும்பும் பழக்கமே அநேக குடும்பங்களில் இல்லாமல் போய்விட்டது. அதிகாலை ஜெபமே மறந்துபோய் விட்டது. அப்புறம், அப்புறம் என்று நாளும் முடிந்துவிடுகிறது. தேவஜனமே! தேவன் நமக்கு கொடுத்திருக்கும் இக்கிருபையின் காலத்தை பயன்படுத்தி ஜெபத்தில் வளருவோம். புதுபெலன் அடைவோம், அப்போது சூழ்நிலை எதுவானாலும் நாம் சோர்ந்து போகவுமாட்டோம், இளைப்படையவும் மாட்டோம். அல்லேலூயா!