Monday, July 4, 2022

"தேவனின் தேவை"

"தேவனின் தேவை"

”இயேசு... பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.” – யோவான் 6:5

கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா ஏற்படுத்திய நிதி நெருக்கடி சொல்லி முடியாதது. நமது நாட்டில் மிகப்பெரிய பணத்தேவை ஏற்பட்டது. ஒவ்வொரு தரப்பினரும் தங்களால் முடிந்த பண உதவியை அரசாங்கத்திடம் அளித்தனர். நாட்டின் இந்த தேவையை மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உணர்ந்தனர். மிகவும் பின்தங்கிய, வசதியற்ற கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் தங்களின் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எண்ணிப்பார்க்காமல் கூட தங்கள் மாவட்ட காவல் அதிகாரியிடம் கொடுத்தனர். அந்த பணத்தை பத்திரமாக மத்திய அரசிடம் அந்த அதிகாரி ஒப்படைத்தார். மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவருமே அந்த சிறுவர்களைப் பாராட்டினர்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ள தேவன், ஆனால் ஜனங்கள் சாப்பிட அப்பம் எங்கே கொள்ளலாம் என்று கேட்கிறார். யோவான் 6ம் அதிகாரத்தில் இதை நாம் வாசிக்கிறோம். இதுதான் தேவனின் உள்ளம், தேவனின் தேவை. இதைக் கவனித்த பெயர் சொல்லப்படாத சிறுவன் ஒருவன் தன் கையிலிருந்த 5 வாற்கோதுமை அப்பங்களையும், 2 மீன்களையும் சற்றும் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்தான். இயேசு கிறிஸ்து அந்த அப்பங்களையும், மீன்களையும் கொண்டு ஏறக்குறைய ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தார். மேலும் மீதியான துணிக்கைகளை சேர்த்து வையுங்கள் என்று கூறினார். ஒன்றும் சேதமடையக் கூடாது என்று அந்த சிறுவனை கனப்படுத்தும்படி கூறினார். மீதியான துணிக்கைகளை பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.

இதை வாசிக்கின்ற நண்பர்களே! இந்த நாட்களில் தேவனின் தேவை ஒன்றும் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். ஆண்டவர் இயேசு வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத ஜனங்களின் இரட்சிப்பிற்காக பரிதபித்துக் கொண்டே இருக்கிறார். என்னால் படைக்கப்பட்ட என் ஜனங்கள் என்னை அறியாமல் எங்கோ அலைந்து கொண்டிருக்கிறார்களே என்று கண்ணீர் வடிக்கிறார். இந்த உலக மக்கள் மீட்பை பெற வேண்டும், பரலோக ராஜ்ஜியத்திற்கு தகுதியுள்ளவர்களாய் வாழ வேண்டும். இவைகள்தான் தேவனின் தேவை! இதை சந்திப்பதற்கு நாம் சிறுபிள்ளையைப் போல நம்மிடம் உள்ள திறமை, தாலந்து, கல்வி, அறிவு, பணம் ஏன் நம்மையே கொடுப்போமா? தேவன் நம்மைக் கொண்டுதான் இந்த தேசத்தை, உலகை ஆசீர்வதிக்க விரும்புகிறார். இதைப் புரிந்து கொண்டவர்களாய் கள்ளம் கபடம் இல்லாத குழந்தையைப் போல நம்மையே ஒப்புக்கொடுப்போம். தேவனின் தேவையை சந்திப்போம்.