Tuesday, July 19, 2022

கிறிஸ்துவில் வைராக்கியம்

🍒 "கிறிஸ்துவில் வைராக்கியம்" 🍒

“நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்...” - கலாத்தியர்.4:18 

அப்போஸ்தலனாகிய பவுல் அத்தேனே பட்டணத்தில் தன் உடன் ஊழியர்களுக்காக காத்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருப்பதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியம் அடைந்து, இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் குறித்து அந்தப் பட்டணத்து மக்களுக்கு அறிவிக்க ஆரம்பித்தார். சிலர் பவுல் சொல்லிய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு விசுவாசிகளானார்கள் என்று வாசிக்கிறோம்.

நாமும் கூட நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விக்கிரகக் கோயில்களைப் பார்க்கிறோம். அவைகள் நமக்கு நன்மை செய்யும் என்று அவைகளைப் பின்பற்றி போகிற மக்களையும் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில் நம்முடைய உள்ளம் எத்தனை முறை ஆவியில் வைராக்கியம் கொண்டிருக்கிறது? மெய்யான தேவனை அவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவை குறித்து எத்தனை பேருக்கு அறிவித்திருக்கிறோம்? நம்முடைய வைராக்கியம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? கிறிஸ்தவன் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, ஒரு சபையில், ஸ்தாபனத்தில் அங்கமாயிருந்து, அதைப் பிடித்துக் கொண்டு வைராக்கியம் பாராட்டுகிறவர்களாக இருக்கிறோமா? இல்லை, கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு அங்கமாக இருந்து மெய்யான கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா?

இன்று கிறிஸ்தவரகளாகிய நாம் இயேசுவின் பெயரிலே எத்தனை பிரிவுகளாய் பிரிந்து கிடக்கிறோம்? நல் விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது தான். நான் இந்த ஸ்தாபனத்தைச் சார்ந்தவர், நீங்க அந்த ஸ்தாபனத்தைச் சார்ந்தவர் என்ற பிளவுகளால் கிறிஸ்தவ மக்களிடையே காணப்படும் விசுவாசம் குறைந்து கொண்டே செல்வதைக் காணமுடிகிறது. இப்படிப்பட்ட பிரிவுகளில் வைராக்கியம் பாராட்டுவதை விட்டு கிறிஸ்துவுக்காக வைராக்கியம் பாராட்டுகிறவர்களாக வாழ்வோம். ஜனங்கள் மெய்யான தேவனை அறியாமல் விக்கிரகங்களால் கட்டப்பட்டு இருக்கிறார்களே என்று பவுல் வைராக்கியம் கொண்டதுபோல, ஆண்டவரை அறியாத மக்களுக்காக வைராக்கியம் கொள்வோம். மாம்ச வைராக்கியத்தை விட்டொழிப்போம். சுவிசேஷத்தை விதைப்போம், தேவராஜ்யம் கட்டப்பட விசுவாசத்தில் ஒன்றிணைவோம். ஆமென்.