Wednesday, July 6, 2022

"என் எஜமானன் யார்?"

"என் எஜமானன் யார்?"

“…சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக” (ரோமர் 6:12).

"பதினைந்து வயது வாலிபன் ஒருவன், சிறுபிள்ளைப் பழக்கம் ஒன்றை இன்னமும் விடாதிருந்தான். பார்ப்பதற்கு நல்லதல்ல, இதை விட்டுவிடு என்று சொன்னபோது, அவன், சொன்னது: “என்னால் இதை விடமுடியவில்லை.” இது தீங்கற்ற சிறு பிள்ளைத்தனம். ஆனால் நம்மில் எத்தனைபேர் நம்மில் ஒட்டிக்கொண்டிருக்கும் சில தீதான காரியங்களிலிருந்து நம்மை விடுவிக்க முடியாமல் உள்ளான மனதில் தவித்து நிற்கிறோம்!"

"பவுல், அழகான, ஆழமான, ஆசீர்வாத வாக்குறுதி ஒன்றை நமக்குத் தந்திருக்கிறார். இப்படி யாராவது நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்களா? அல்லது வாக்குறுதி கொடுத்திருக்கிறார்களா? “நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.” நமது பாவசரீரத்தின் ஆட்சி மாறிவிட்டது; அதாவது நம்மிலிருந்த பாவ சுபாவமே மாறிவிட்டது. இதுவரை அந்த பாவ சுபாவம் நமக்குக் கட்டளை கொடுத்துக்கொண்டிருந்தது. இப்போது நமக்குள் வந்து விட்ட ஆண்டவர் நம்மைப் பொறுப்பெடுத்துள்ளார். இந்த ஒரே விசுவாசம் போதாதா நமது சத்துருவாகிய சாத்தானை ஜெயித்தெழ! ஆனால் இது முடியக்கூடிய காரியமா? விசுவாசித்தாலும் அடிக்கடி நாம் விழுந்துபோகிறோமே! அப்போது வார்த்தை பொய் சொல்லுமா? இல்லை!"

"அப்படியென்றால் பாவ இச்சைகளை எதிர்த்துநின்று இந்த ஆசியை நமதாக்குவது எப்படி? முதலில், நமக்குள் இருக்கின்ற தனிப்பட்ட பெலவீனங்களை நாம் அடையாளங் காணவேண்டும். அடுத்தது, எவ்வளவுதான் கர்த்தருக்குள் புதிய வாழ்வு வாழ எத்தனித்தாலும், நம்மை அடிக்கடி தடுமாற வைக்கின்ற சோதனை எதுவென்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அடுத்தது, நாம் எதை விட்டுவிட நினைக்கிறோமோ அதுவே நம்மைத் தொடர்ந்துவரும் என்பதை நன்குணர்ந்து, நம்மை சோதனைக்குள்ளாக்கும் சூழ்நிலை உருவாகும்போது, அவ்விடத்தை, அல்லது அந்தக் காட்சியைத் தவிர்த்துவிடவேண்டும். மேலும், நல்ல நினைவுகளால் நம்மை நிரப்பி, நல்ல பழக்கங்களிலும் நல்ல சேவையிலும் நம்மை ஈடுபடுத்தி ஜெபத்திலும் வேதத்திலும் உறுதியாய் நிற்கவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தேவனுடைய பெலத்திலும் கிருபையிலும் நாம் சார்ந்திருப்பதே மேலானது. அதுவே சரியான பாதுகாப்பு!"

"நாம் பாவத்தைக் கண்டு பயப்படவேண்டிய அவசியம் இல்லை. நமது பெலத்தினால் அதை மேற்கொள்ளவே முடியாதுதான். ஆகவே, சோதனை வரும்போது, ‘என் எஜமானர் இயேசுவே; அவர் சத்தத்திற்கே என் செவிகள் திறக்கும்” என்று சொல்லுவோம்."

“…கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” (ரோமர் 6:14).

ஜெபம்: ஆண்டவரே, நீரே எங்கள் எஜமானர்; உம்முடைய பெலத்திலும் கிருபையிலும் நாங்கள் சார்ந்து பாவத்திற்கு விலகி ஜீவிக்க கிருபை தாரும். ஆமென்.