Tuesday, July 12, 2022

"நம் பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்"

"நம் பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்" 

"இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்." - (லூக்கா 23:28).

ஒவ்வொரு குடும்பமும் தேவனுடைய அநாதி திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ஒன்றாகும். குடும்பத்திலுள்ள பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரமாய் இருக்கிறார்கள். பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கும் நம் ஆண்டவர் ஒவ்வொரு பிள்ளையின் மேலும் அதிக கரிசனை உள்ளவராக இருக்கிறார்.

இயேசுகிறிஸ்துவிடம் ஆசீர்வாதத்தை பொறும்படி தங்கள் பிள்ளைகளை கொண்ட வந்த பெற்றோரை சீஷர்கள் அதட்டினர். ஆனால் இயேசுவோ அவர்ளை தடைபண்ண வேண்டாம் என்று சொல்லி அவர்களை அணைத்து முத்தமிட்டார்.

உலகத்தார் சிறுபிள்ளைகளை அலட்சியப்படுத்தினாலும் பிள்ளைகளின் இருதயத்தை அறிந்த தேவன் பெருந்திரள் கூட்ட ஜனங்களுக்கு முன்பாக ஒரு பிள்ளையை தூக்கி நீங்கள் மனந்திரும்பி இந்தப் பிள்ளைகளைப் போலாகாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று பிள்ளைகளை எடுத்துக் காட்டாக நிறுத்தினார்.

வேதத்திலே சிறுபிள்ளைகள் மூலம் அற்புதம், சிறு பிள்ளைகள் பெற்ற சுகம், பெற்றோருக்கு பிள்ளைகளை வளர்க்க ஆலோசனைகள் என்று அநேக சம்பவங்கள் வேதம் முழுவதும் முத்து சிதறல்களைப் போல சிதறி கிடக்கின்றன.

குறிப்பாக பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்த அநேக பெற்றோரைக் குறித்து நாம் வாசிக்க முடியும். தண்ணீரின்றி தன் பிள்ளை சாவதை பார்க்க முடியாமல் கதறிய ஆகார், தன் வயிற்றிலிருந்த இரட்டைப் பிள்ளைகளைக் குறித்து தேவனிடம் விசாரித்த ரெபேக்காள், தன் பிள்ளைகளை ஆசீர்வதித்த யாக்கோபு, பிறக்கப் போகிற பிள்ளையை வளர்க்க கற்றுக் கொடுக்கும்படி ஜெபித்த மனோவா, மலடியான தனக்கு பிள்ளை வேண்டி கண்ணீர் வடித்த அன்னாள், தன் பிள்ளையின் உயிருக்காக உபவாசித்து இரா முழுவதும், தரையிலே விழுந்து கிடந்த தாவீது, தன்னுடைய பிள்ளைகளின் பாவத்திற்காக சர்வாங்க தகனபலிகளை செலுத்தின யோபு, தன் மகளுக்காக இயேசுவின் பாதத்தில் விழுந்து மன்றாடின யவீரு, பிசாசினால் கொடிய வேதனைப்பட்ட தன் பிள்ளைக்காக நாய்க்குட்டியைப் போல தன்னை தாழ்த்தின கானானிய ஸ்திரீ என பிள்ளைகளுக்காக மன்றாடின இன்னும் பல பெற்றோரைக் குறித்து வேதத்தில் நாம் வாசிக்கிறோம். நாம் நம் பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறோமா?

தாயின் கர்ப்பதில் இருக்கும்போதே நாம் நம் பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக, சாட்சியான வாழ்க்கைக்காக நாம் தேவனிடம் அன்றாடம் மன்றாட வேண்டும். அவர்களுக்கு சாப்பாடு ஊட்டும்போதும், தூங்க வைக்கும்போதும், அவர்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது அவர்கள் வாலிபர்களாகும்போது, அவர்கள் கர்த்தரை விட்டு பின்வாங்கிப் போய் விடுவார்களோ என்று நாம் கண்ணீர் விட வேண்டிய அவசியம் இராது.

வாலிப பிள்ளைகளுக்கு ஏற்றத்துணை கிடைக்கும்படியாகவும், வாலிப நாட்களில் அவர்கள் கர்த்தரை பற்றிக் கொள்ளும்படியாகவும் நாம் ஜெபிக்க வேண்டும். சில வாலிப பிள்ளைகளுக்கு அவர்கள் வாலிப வயதை அடையும்போது சில அரிய நோய்கள் அவர்களை தாக்க வாய்ப்புள்ளது. சிறுவயதில் நல்ல சுகமாய் இருக்கும் பிள்ளைகள், வாலிப வயதில் சில வியாதிகள் தாக்கும்போது, சில வியாதிகள் குணமடையக் கூடியவை, சில வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வைக்கும் வியாதிகளாய் இருக்கக்கூடும். அதுப் போன்ற தலைமுறையாக வரும் வியாதிகள் நம் பிள்ளைகளை தாக்காதபடி கர்த்தரிடம் நாம் அவர்கள் சிறுவயதாயிருக்கும்போதே அவர்களுக்காக பாரப்பட்டு ஜெபிக்க வேண்டும்.

கர்த்தருக்கு பயப்படுதலை கற்றுக் கொண்ட பிள்ளைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்காக வாழ்வார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளாக நம் பிள்ளைகள் வாழும்படியாக ஜெபிக்க வேண்டியது பெற்றோராகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
ஜெபிப்போம், ஜெயத்தை பெறுவோம். ஆமென்.