Saturday, July 16, 2022

அனலாயிருங்கள்

"அனலாயிருங்கள்"

“...ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்” - ரோமர் 12:11

வட இந்தியப் பகுதியில் இரயில் பிரயாணங்களில் தினமும் பார்க்க ஒரு வேடிக்கையான காரியம் உண்டு. அது காலை 7 மணிக்கே "சமோசா" ரெடி ஆகி விடும். சாப்பிடுவதற்கு சூடாக சுவையாக இருக்கும். அதை விற்கும் நபர் “கரம் சமோசா” (சூடான சமோசா) என்று கூவிக் கொண்டே விற்பார். இதில் என்ன வேடிக்கையென்றால் காலை 7 மணிக்கு செய்யப்பட்ட சமோசாவை மதியம், மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் “ கரம் சமோசா, கரம் சமோசா” என்று கூவி விற்பார். இன்னும் வேடிக்கை என்னவென்றால் மறுநாள் காலையிலும் மீதமுள்ள சமோசாவையும் சூடான சமோசா என்று தான் விற்பார். நமது பார்வையில் அந்த சமோசா எப்படியோ, ஆனால் அதை செய்தவர் பார்வையில் எப்போதும் “என் சமோசா நான் செய்யும் போது இருந்ததைப் போல சூடாகத் தான் இருக்கும்” என்று எண்ணுகிறார்.

அப். பவுல் ரோமாபுரியில் உள்ள சபை விசுவாசிகளுக்கு அநேகக் காரியங்களை எழுதுகிறார். அதிலும் ரோமர் 12 ம் அதிகாரத்தில், “ “ஆவியிலே அனலாயிருங்கள்“ என்று எழுதுகிறார். அதாவது ஒரு ஊழியக்காரனாக தன் சபை மக்களுக்கு எப்படிப்பட்ட வார்த்தையை எழுதுகிறார் என்று கவனித்துப் பாருங்கள். பவுலுடைய எண்ணமெல்லாம் தன் மக்கள் எப்போதும் ஆவியில் அனலாயிருக்க வேண்டும் என்பதே. அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர வேண்டும், துடிப்பாக இருக்க வேண்டும், ஒரே சிந்தையாயிருக்க வேண்டும், உலக ரீதியான ஆசீர்வாதத்தை விட இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தோடு இருந்து எப்படியாயினும் தேவனுக்கென்று வாழ வேண்டும். தேவனுடைய ஊழியத்தை செய்ய வேண்டும், தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும் என்பதே பவுலின் விருப்பம்.

பிரியமானவர்களே! இதை வாசிக்கின்ற உங்கள் உள்ளம் எப்படி இருக்கிறது? ஒரு சமோசா விற்பவர் தன சமோசா எப்போதும் சூடாக இருக்கும் என நினைக்கிறார் . ஒரு தேவ ஊழியர் தன் சபை மக்கள் ஆவியில் அனலாயிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் . இன்று கிறிஸ்துவை உடைய கிறிஸ்தவர்களாகிய நாம் எப்போதும் அனலைப் போல இருக்க வேண்டும். அதாவது நாம் எப்போதும் பேசுவதில் சிந்திப்பதில் செயல்படுவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எந்த பிரச்சனையையும் கண்டு சோர்வடைந்து ஒரு ஓரத்தில் உட்கார்ந்து விடக்கூடாது. தேவன் உங்களைத் தெரிந்து கொண்ட நாளில் எப்படி அன்பு கூர்ந்தாரோ, அதே போல் தான் இன்றும் அன்பு கூருகிறார். ஆகவே தேவனுக்காக எப்போதும் நிற்போம்! ஓடுவோம்! ஓடிக்கொண்டே இருப்போம்! செயல்பட்டுக் கொண்டேயிருப்போம்! ஆமென்.