Thursday, July 21, 2022

உதவி

"உதவி"

“...நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.” - மத்தேயு 7:2

ஒருமுறை சாதுசுந்தர்சிங் திபெத் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரோடு கூட ஒரு நபரும் பயணப்பட்டார். அவர்கள் மலையின் குளிர் தாங்க முடியாமல் நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் உடலில் முற்றிலுமாய் சூடு இல்லாமல் நடுங்கிக் கொண்டும் பலனற்ற நிலையிலும் இருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வழியில் இருந்த ஒரு பள்ளத்தாக்கில் ஒரு நபர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது சாது அவர்கள் அவருக்கு உதவும்படி தன்னோடிருந்த நபரை அழைத்தார். ஆனால் அவரோ நாமே பெலனில்லாமல் உள்ள நிலையில் அவருக்கு எப்படி உதவ முடியும் எனக்கூறி சென்று விட்டார். ஆனால் சாது இறங்கிச் சென்று அவரை தன் முதுகில் தூக்கிக்கொண்டு மெதுவாக நகர்ந்து சென்றார். அவருடைய உடல் உஷ்ணம் பெற ஆரம்பித்தது. அதினால் இவருடைய சரீரமும் பெலனடைந்தது. அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கும்போது சற்று தொலைவில் ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்டனர். அவர் சாதுவுக்கு உதவி செய்ய மறுத்த நபர். அவர் உடல் உஷ்ணம் இல்லாததினால் குளிரில் இறந்துவிட்டார்.

வேதத்தில் நாம் பார்க்கிறோம், “நீங்கள் எந்த அளவின்படி அளக்கிறீர்களோ அதே அளவின்படி உங்களுக்கும் அளக்கப்படும்” என்று. அப்படியானால் நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கின்றோமோ அதையே தேவன் நமக்கும் திரும்பத் தருவார். நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யாமல் இருப்போமானால் நாம் ஆபத்துக் காலத்தில் கூப்பிடும்போது தேவனும் நமக்கு செவிகொடுக்க மாட்டார், மற்றவர்களும் உதவ மாட்டார்கள்.

இதற்கு வேதத்தில் ஒரு நல்ல எடுத்துக்காட்டு இயேசு கூறிய உவமையில் வருகின்ற நல்ல சமாரியன். ஒரு மனிதன் கள்ளர்களால் காயப்படுத்தப்பட்டு இறக்கும் நிலையில் இருப்பதைக் கண்ட அவன் அவனுக்கு உதவ முன்வருகிறான். அவனுக்கு முன்பாக லேவியர், ஆசாரியர் என பலர் கடந்து சென்றனர். ஆனால் அந்த சமாரியன் மட்டுமே அவனைப் பார்த்து பரிதபிக்கிறான். எனவேதான் அவன் தேவனால் “நல்ல சமாரியன்” என சாட்சி பெறுகிறான்.

இந்த நாளில் நாம் நம்முடைய வாழ்வை ஆராய்ந்து பார்ப்போம். உதவி என்று உண்மையாய் நம்மை நம்பி வருகின்றவர்களுக்கு நாம் சொல்லும் பதில் என்ன? நியாயத்தீர்ப்பு நாளில் நாம் எந்தப் பக்கம் நிற்கப் போகின்றோம்? சிறியோருக்கு உதவியவர்களாகவா? அல்லது தேவன் அறியேன் என்று சொன்ன கூட்டத்தோடா?