Wednesday, July 20, 2022

"நாம் விசேஷித்தவர்கள்!"

"நாம் விசேஷித்தவர்கள்!"

“உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” - யோவான்.1:9

மிகப் புகழ்பெற்ற செல்வந்தன் ஒருவன் வாழ்ந்த ஊரிலே, நீதிமானும், தேவன் மீது பக்தியுமுள்ள ஒருவரும் வாழ்ந்து வந்தார். செல்வந்தனுக்கு கிடைத்த மரியாதையைப் போலவே இவருக்கும் மரியாதையையும் மதிப்பையும் தந்து வந்தனர் அந்த ஊர் மக்கள். பல இடங்களில் இருந்து அவரைக் கண்டு ஆலோசனை கேட்க அநேகர் வந்தனர். அது அந்த செல்வந்தனுக்கு கோபத்தையும், பொறாமையையும் ஏற்படுத்தியது. இது எப்படி? நான் திறமையானவன், நல்ல செல்வந்தன், அநேகருக்கு உதவுகிறேன், அவனோ எந்த திறமையும் அற்றவன், இயேசு தெய்வத்தினை நம்பியே வாழ்க்கை நடத்துபவன் அவனுக்கு ஏன் இவ்வளவு புகழ், மரியாதை என சிந்தித்தான். ஒரு நாள் நேரடியாக அவரைச் சென்று பார்த்து கேட்டே விடுவது என முடிவு செய்தான்.

ஒரு நாள் மாலை வேளையிலே அம்மனிதரைக் காணச் சென்றான். அந்த தேவ பக்தியுள்ள மனிதர் அவரை அங்கு இருக்கச் செய்து, சற்று இருட்ட ஆரம்பித்த பின் சந்தித்தார். செல்வந்தனாகிய அம்மனிதன், ‘’என்னைப் பிறர் மதிப்பதற்கும், மரியாதை செய்வதற்கும் காரணம் உள்ளது. உன்னை ஏன் எல்லாரும் என்னைப் போல் மதிக்கவேண்டும்?’’ என்று கேட்டான்.

அம்மனிதர் அவரைத் தன் வீட்டிற்குப் பின் உள்ள ரோஜா தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு நிலவு பிரகாசமாய் தெரிந்தது. அவர் செல்வந்தரை நோக்கி ‘’கடவுள் உண்டாக்கிய இந்த ரோஜா, அந்த நிலவைப் பார்த்து, நான் நிலவைப் போல் உயரத்தில் இல்லையே, ஒளிவீசவில்லையே எனக் கவலையும் பொறாமையும் கொள்வதில்லை. அந்த நிலவும் ரோஜாவைப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் நான் இல்லையே! என நினைப்பதில்லை. மனிதர்களாகிய நம்மையும் ஆண்டவராகிய இயேசு தனித்தன்மையுடனும், தனித்தனி தாலந்துகளை தந்தும் படைத்துள்ளார். நாம் ஏன் ஒருவரை ஒருவர் பார்த்து ஒப்பிட்டு பொறாமையும், கவலையும் கொள்ள வேண்டும்?’’ எனக் கேட்டார்

காயீன், ஆபேல் மேல் பொறாமை கொண்டான். யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பின் மீது பொறாமை கொண்டனர். சவுல், தாவீது மீது... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நம்மிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கும்போதோ, பிறர் ஏற்றுக் கொள்ளப்படும்போதோ, இந்த பொறாமை உள்ளத்திற்குள் துளிர்க்கிறது. நம்மிடம் இல்லாததைக் கண்டு ஏன் பிறர் மீது பொறாமை கொள்ள வேண்டும்? நம்மிடம் தேவன் பல திறமைகளை கொடுத்து நம்மை விசேஷித்தவர்களாகவே படைத்திருக்கிறாரே! என்ற எண்ணம் இல்லாவிட்டால், நம்மை குறைவாய் மதிப்பிடுவோம். பிறரைக் கண்டு பொறாமையே கொள்ளுவோம். நண்பரே! பொறாமை எலும்புருக்கி, அது நமது மனதை கெடுத்துவிடும். ஆகவே ஜெபத்தோடு இந்த எண்ணத்தை விரட்ட பிரயாசப்படுவோம். நான் விசேஷமானவன். தேவன் எனக்குக் கொடுத்த திறமையைக் கொண்டு தேவனுக்கும் பிறருக்கும் பிரயோஜனமாய் வாழ்வேன் என்ற எண்ணமே நம்மை நிரப்பட்டும்.