Monday, July 18, 2022

எழும்பு, எழும்பு

"எழும்பு, எழும்பு"

“...நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;” - எபிரெயர் 12:1

தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட தொடர் தோல்விகள், விழுகைகள் இவற்றை நினைத்தவாறே சோர்ந்துபோய் இருந்தார் அருள். ஆண்டவருக்காக வைராக்கியமாய் வாழவேண்டுமென்ற எண்ணம் ஒருபக்கம் இருந்தாலும், இயலாமை அவரை சோர்வடையச் செய்தது. அப்போது வீட்டின் ஒரு மூலையில் இருந்த சிலந்தி பூச்சியின் மீது அவர் கவனம் சென்றது. அது தனது வலையை பின்னுவதும் திரும்பவும் விழுவதும் மீண்டும் கட்டுவதும் என தன் வேலையை விடாமுயற்சியோடு செய்து கொண்டிருந்தது. எத்தனை முறை விழுந்தாலும் அது சோர்ந்து போகாமல் தன் வேலையை செய்கின்ற காரியம் அவரை உற்சாகப்படுத்தியது.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்வும் கீழே விழுவதும் எழும்புவதுமாக இருக்கலாம். இதனிமித்தம் கிறிஸ்தவ வாழ்விலே முடிவு பரியந்தம் நிலை நிற்க முடியாதோ என அஞ்சி கொண்டிருக்கலாம், ஆனால் கலங்கத் தேவையில்லை. வேதத்திலே மோசேயின் வாழ்வை பார்த்தால், ஆரம்பத்தில் கோபத்தினால் எகிப்தியன் ஒருவனை கொன்று புதைத்து விட்டார். கொலை செய்யுமளவிற்கு கோபக்காரனான மோசேயை தேவன் வனாந்தரத்தில் 40 ஆண்டுகள் பயிற்சி கொடுத்து, பின்பு லட்சக்கணக்கான இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்லும் பெரிய பொறுப்பை மோசேயிடம் கொடுத்தார். அவர்கள் 40 ஆண்டு காலம் மோசேயை தினம் தினம் கோபமூட்டும்படியே நடந்தனர், பேசினர். ஆனால் மோசேயோ சாந்தகுணமாய் நடந்து கொண்டார். எந்த கோபம் அவருக்கு பெலவீனமாயிருந்ததோ, அதிலே ஜெயம் பெற்று ஆண்டவரின் பாராட்டையும் பெற்றார். பூமியிலுள்ளவர்களிலெல்லாம் சாந்தகுணமுள்ளவன் என்று ஆண்டவர் பாராட்டினாரே!

ஆம், எனக்கன்பானவர்களே! நீங்கள் அடிக்கடி விழுந்து ஆவிக்குரிய சரிவை காணும் காரியம் கோபமா? பொதுவாக நமக்கு எதினால் கோபம் வருகிறது? நான் செய்வது சொல்வது தான் சரி, இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பெருமை நமக்குள் ஒளிந்திருப்பதுதான். நம்மில் அநேகர் சீக்கிரமாய் விழுந்து தடுமாறுவதும் இந்த கோபம் என்னும் பெலவீனத்தில்தான். என்னால் மாறவே முடியவில்லை என்று மனஸ்தாபப்படுகிறீர்களா? பதற வேண்டாம். வேதம் கூறும் ஆலோசனைப்படி தாழ்மையை தரித்துக் கொள்ளுங்கள். ஜெபத்துடன் பொறுமையாயிருக்க முயற்சியுங்கள். மோசேயை மாற்றின தேவன் உங்களையும் மாற்றுவார். உங்களைத் தடுமாறச் செய்யும் பெலவீனம் எதுவோ அதிலே நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.